ஜெர்மன் நாட்டு பார்வையற்ற சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை


ஜெர்மன் நாட்டு பார்வையற்ற சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு ஜெர்மன் நாட்டில் இருந்து பார்வையற்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் சுற்றுலா வந்தனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு ஜெர்மன் நாட்டில் இருந்து பார்வையற்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சிற்பங்களை தொட்டு ரசித்தனர். அவர்களுக்கு உடன் வந்த சுற்றுலா வழிகாட்டிகள் ஒரே நீளமான பாறைக்குன்றில் 5 ரதங்கள் தனித்தனியாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள விதம், அவற்றின் விமானம் மற்றும் நந்தி, யானை, சிங்கம் சிற்பங்களை பற்றி விளக்கி கூறினர். அர்ச்சுனன் தபசு தொகுப்பு சிற்பங்கள், பாறை வெட்டு கற்களில் உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கடற்கரை கோவிலின் சரித்திர பின்னணி குறித்து தெளிவாக விளக்கி கூறினர்.

ஜெர்மனியில் இருந்து உறுவினர்கள் மூலம் ஒரு குழுவாக அழைத்து வரப்பட்ட கண் பார்வையற்ற 6 வெளிநாட்டு பயணிகளும் அனைத்து சிற்பங்களையும் கைகளால் தொட்டு ரசித்து 1,500 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் உளிகளால் செதுக்கி வடிவமைக்கப்பட்ட அவற்றின் வரலாற்று தகவல்களை அறிந்து வியந்தனர். அவர்கள் மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒலி நாடாவையும் சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களுக்கு வழங்கினர்.


Next Story