கோவை அதிகாரிகளுடன் ஜெர்மன் மந்திரி ஆலோசனை
கோவையில் ஏற்படுத்தப்பட உள்ள தொழில்நுட்ப அறிவியல் பரிமாற்றம் குறித்து ஜெர்மன் மந்திரி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவையில் ஏற்படுத்தப்பட உள்ள தொழில்நுட்ப அறிவியல் பரிமாற்றம் குறித்து ஜெர்மன் மந்திரி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
ஜெர்மன் நாடு துருங்கியா மாநில பொருளாதாரம், அறிவியல் மற்றும் டிஜிட்டல் சமூக மந்திரி வொல்ப்கேங்க் டைபென்சி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கோவை வந்தனர். அவர்கள் கோவை மாநகர பகுதியில் தொழில்நுட்ப அறிவியல் பரிமாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்பை சந்தித்து பேசினர்.
பின்னர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மந்திரி வொல்ப்கேங்க் டைபென்சி மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது ஜெர்மன் நாட்டு துருங்கியா மந்திரி பேசும்போது கூறியதாவது:-
கோவை மக்களையும், தொழில்துறையினர் மற்றும் கல்வி அமைப்புகளையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே எங்களது மாநிலத்தையும் கோவை மாநகரையும் நாங்கள் இணைக்க விரும்புகிறோம். எங்கள் மாநிலத்தில் தொழில்நுட்ப மனிதவளம் மிகவும் குறைவாகதான் இருக்கிறது. ஆனால் பயிற்சி கொடுக்கும் திறன் அதிகமாக உள்ளது.
6 மாதம் பயிற்சி
கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்களை எங்கள் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து, பயிற்சியாளர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவது குறித்து திட்டமிட உள்ளோம். இதன் மூலமாக இரு நாடுகளும் பயன்பெறும் விதமாக அமைய வேண்டும். மேலும் கோவை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஜெர்மனிக்கு அழைத்துச்சென்று ஜெர்மன் மொழி மற்றும் அங்குள்ள கலாசாரத்தை பற்றி 6 மாதம் இலவசமாக பயிற்சி கொடுக்க உள்ளோம்.
அதன் பின்னர் அவர்கள் அங்குள்ள தொழிற்சாலைகளில் 5 ஆண்டுகள் பயிற்சியுடன் சேர்ந்த வேலைவாய்ப்பை அளிக்க உள்ளோம். அதுபோன்று கோவையை சேர்ந்த தொழில் முனைவோரை தேர்வு செய்து அவர்களுக்கு மானியம் கொடுக்கவும், அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து மேம்படுத்தவும் முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பெடரல் பப்ளிக் ஆப் ஜெர்மன் கான்சல் மைக்கேல் குச்லர், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப குழுவினர் மற்றும் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அதிகாரிகள், தொழில்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.