15 பேருக்கு டெங்கு பாதிப்பு காய்ச்சல் பாதித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


15 பேருக்கு டெங்கு பாதிப்பு    காய்ச்சல் பாதித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்;  பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர்

15 பேருக்கு சிகிச்சை

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 13 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு வார்டுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

55 பேர் பாதிப்பு

பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மேலும் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 55 பேர் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு 5 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுவதுடன், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றார்.

அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பால், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story