நேர்த்திக்கடனாக கோவில்களுக்கு வழங்க தயாரான ராட்சத அரிவாள்கள்


நேர்த்திக்கடனாக கோவில்களுக்கு வழங்க தயாரான ராட்சத அரிவாள்கள்
x

நேர்த்திக்கடனுக்காக கோவில்களுக்கு வழங்க ராட்சத அரிவாள்கள் திருப்புவனத்தில் தயார் செய்யப்படுகின்றன.

சிவகங்கை

திருப்புவனம்,

நேர்த்திக்கடனுக்காக கோவில்களுக்கு வழங்க ராட்சத அரிவாள்கள் திருப்புவனத்தில் தயார் செய்யப்படுகின்றன.

ராட்சத அரிவாள்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. அங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள், மேலும் இறைச்சி வெட்ட பயன்படும் கத்திகள் உள்பட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயாரித்து கொடுக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 15 அடி, 21 அடி என தனித்தனியாக ராட்சத அரிவாள்களை இரு பட்டறையை சேர்ந்தவர்கள் தயாரித்துள்ளனர்.

140 கிலோ எடை

இதுகுறித்து 15 அடி நீள அரிவாள் தயாரித்துள்ள சதீஷ்குமார் நாகேந்திரன் என்பவர் கூறியதாவது:- எங்களிடம் மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியை சேர்ந்த ஒருவர் 15 அடி நீளத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க ராட்சத அரிவாள் தயார் செய்ய வேண்டுமென்றார். அடிக்கு ரூபாய் 2 ஆயிரம் வீதம் கூலி பேசி தயார் செய்தோம். இந்த அரிவாள் கைப்பிடியுடன் சேர்ந்து சுமார் 140 கிலோ எடையில் செய்யப்பட்டுள்ளது.

இந்த அரிவாள் பேரையூர் அருகே உள்ள கருப்புசாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க தயார் செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.

21 அடி நீள அரிவாள்

இதே போல் 21 அடியில் பெரிய ராட்சத அரிவாள் தயாரித்துள்ள கார்த்திக் என்பவர் கூறியதாவது:-

இந்த அரிவாளை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த நபர் தயாரிக்க சொன்னார். இதன் எடை 300 கிலோ ஆகும். இதுபோன்ற பெரிய அரிவாள்களை லாபத்தை எதிர்நோக்கி செய்வது கிடையாது. இந்த அரிவாள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முனி கோவிலுக்கு நேர்த்திக்கடனான வழங்க தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story