நேர்த்திக்கடனாக தயாரிக்கப்பட்ட 3 ராட்சத அரிவாள்கள்

நேர்த்திக்கடனாக 3 ராட்சத அரிவாள்கள் தயாரிக்கப்பட்டன.
திருப்புவனம்
திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடாரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள், இறைச்சி வெட்ட பயன்படும் அரிவாள், கத்திகள், உயரமான மரங்களில் உள்ள இலை, காய் பறிக்கும் தொரட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயார் செய்து கொடுக்கின்றனர். குறிப்பாக கருப்பணசாமி உள்பட பல கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறினால் உயரமான ராட்சத அரிவாள் வாங்கி வைப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்ப அரிவாள் பட்டறையில் 15 அடி, 18 அடி, 21 அடி உயரங்களில் ராட்சத அரிவாள்கள் 150 கிலோ முதல் 450 கிலோ எடை வரை செய்து கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனத்தில் பட்டறை தொழில் செய்து வரும் சதீஷ்குமார் என்பவர் கூறியதாவது:- எங்களிடம் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அரிவாள்கள் தயாரித்து கொடுக்க சொல்கின்றனர். தற்சமயம் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பக்தர் 18 அடி உயரத்தில் ராட்சத அரிவாளும், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பக்தர் 18 அடி உயரத்தில் ராட்சத அரிவாளும், மதுரையை சேர்ந்த ஒரு பக்தர் 21 அடி உயரத்தில் ராட்சத அரிவாளும் தயாரிக்க ஆர்டர் கொடுத்தனர். அடிக்கு ரூ.2000 விதம் கூலி பேசி 3 அரிவாள்கள் தயாரிக்கப்பட்டன. 18 அடியுள்ள ஒரு அரிவாள் 260 கிலோ எடையிலும், மற்றொரு 18 அடி அரிவாள் 180 கிலோ எடையிலும், 21 அடி ராட்சத அரிவாள் 450 கிலோ எடையிலும் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 அரிவாள்களும் அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட உள்ளது என்றார்.






