செஞ்சி பேரூராட்சி மன்ற கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

செஞ்சி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.
செஞ்சி,
செஞ்சி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத்தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நான் அமைச்சராக இருப்பதற்கு அடித்தளம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி தான். தொடர்ந்து 5 முறை பேரூராட்சி தலைவராக இருந்த காலத்தில் செஞ்சி நகருக்கு நிரந்தரமாக திருக்கோவிலூர் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டதோடு, செஞ்சி பஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. தற்போது செஞ்சி நகர மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். முதற்கட்டமாக செஞ்சி நகரில் காந்தி கடைவீதியில் ரூ.6 கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார், கூட்டத்தில் செஞ்சி பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நன்றி தெரிவிப்பது மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சந்திரா, அஞ்சலை, சீனுவாசன், சங்கீதா, சிவக்குமார், மோகன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.