பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சிறுமி கைது


பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சிறுமி கைது
x

உடையார்பாளையம் அருகே கட்டாய திருமணத்தால் பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சிறுமியை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

பச்சிளம் குழந்தை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கு கடந்த 41 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு செல்வதற்காக தனது குழந்தையை வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தையின் வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. மேலும் குழந்தையின் அருகே விஷ பாட்டில் ஒன்றும் கிடந்தது.

தீவிர சிகிச்சை

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பச்சிளம் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் அண்ணன் மற்றும் 16 வயதுடைய அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணின் அண்ணனுக்கும், 16 வயது சிறுமிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

சிறுமி கைது

இதன் காரணமாக கணவர் குடும்பத்தை விட்டு வெளியேற அந்த சிறுமி, பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story