சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனையை மூட மாவட்ட சுகாதாரத்துறை நோட்டீஸ்


சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனையை மூட மாவட்ட சுகாதாரத்துறை நோட்டீஸ்
x

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தனியார் மருத்துவனையை மூட மாவட்ட சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஈரோடு,

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்து ஈரோடு, பெருந்துறை, ஓசூா், சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவா் மற்றும் தரகா் மாலதி, சிறுமியின் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்த ஜான் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது, தமிழகம், ஆந்திரம் மற்றும் கேரளத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டது. குழுவின் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டது.

மருத்துவ விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையை மூட மாவட்ட சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story