மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சிறுமி பலி - தந்தை கண் எதிரே பலியான பரிதாபம்
மதுரவாயல் அருகே தந்தை கண் எதிரே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10 வயது சிறுமி பலியானார்.
ஆவடி அடுத்த அண்ணனூர், ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (32), கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரம்யாயுதா (10), திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வானகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சுகுமார், ரம்யாயுதா உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் அருகே அவர்கள் சென்ற போது, சாலையில் அருகில் சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது உரசியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், சிறுமியின் உடல் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் ரம்யாயுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சிறுமி ரம்யாயுதா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து காரணமான லாரி டிரைவர் பெருமாள் (36), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் சிறுமியின் தந்தை லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயர்த்தப்பினார். மோட்டார் சைக்கிளில் சென்றபோது தந்தை கண் எதிரே மகள் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் மனிஷ் (22). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர் முகப்பேர் மேற்கு காளமேகம் தெருவைச் சேர்ந்த தினேஷ் (24). இருவரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு மோட்டார்சைக்கிளில் சென்றதாக தெரிகிறது. முகப்பேர் கிழக்கு ரெட்டிப்பாளையம் அருகே சென்ற போது மோட்டார்சைக்கிள் நிலைத்தடுமாறி மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மனிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தினேஷை அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.