அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்தால் 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் - கவர்னர் ஆர்.என்.ரவி


அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்தால் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் - கவர்னர் ஆர்.என்.ரவி
x

அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்தால், ‘நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி ஆவேசமாக பேசினார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

'எண்ணித் துணிக' என்னும் தலைப்பில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாணவர்களை அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழகத்தில் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து இருந்தார். சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 'நீட்' தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

கவர்னர் கவுரவித்தார்

அகில இந்திய அளவில், 'நீட்' தேர்வில் முதலிடம் பிடித்த விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை சேர்ந்த பிரபஞ்சனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை கவுரவிக்கும் வகையில், நிகழ்ச்சியின் தொடக்கமாக நடந்த குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுக்கு அழைத்த கவர்னர் ஆர்.என்.ரவி, அவருக்கு ஸ்டெதாஸ்கோப் மற்றும் நினைவு பரிசு வழங்கி, சால்வை அணிவித்து கவுரவித்தார். அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவர் சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அதன்பின்னர், மாணவர்கள் மத்தியில் கவர்னர் பேசியதாவது:-

கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி

'நீட்' தேர்வில் நீங்கள் பெற்ற வெற்றியை கொண்டாடுகிறோம். உறுதியுடன் கடினமாக உழைத்ததன் மூலம் இந்த வெற்றி உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களை நீங்களே நம்பி வெற்றி பெற்றுள்ளீர்கள். 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவது சாதாரணமானது அல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணம். நமது மாநிலத்தில் உள்ள தரமான கல்வி, நாட்டில் மற்ற பகுதிகளில் இருக்கும் மாணவர்களை பொறாமை கொள்ள செய்யும். ஆனால், 'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களால் போட்டி போடமுடியாது என்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.

வாழ்வில் ஒரு மைல்கல்

கடந்த காலங்களில் மாணவர்கள் தற்கொலைகள் நடந்தன. தேர்வை பயந்த மனநிலையோடு பார்க்கும் நிலையை ஏற்படுத்தினார்கள். பலர் வெற்றி பெற முடியாது என கண்ணீர் விட்டனர். ஆனால், இன்று நமது மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் நாட்டிலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றது என்பது உங்கள் வாழ்வில் ஒரு மைல் கல். தற்போது அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது. நீங்கள் வெற்றி களிப்பில் தேங்கி விடக்கூடாது. தொடர்ந்து இதே உத்வேகத்துடன் மருத்துவம் படிக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கு இணையான மருத்துவம்

வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வருகின்றனர். அந்தளவுக்கு நமது டாக்டர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து சிகிச்சைக்கு வருவதை கூட நம்மால் பார்க்க முடிகிறது. அமெரிக்க டாக்டர்களுக்கு இணையான மருத்துவத்தை குறைந்த செலவில் நமது டாக்டர்கள் வழங்குகின்றனர்.

நீங்கள் படித்த பள்ளிக்கு அடிக்கடி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செல்லுங்கள். 'நீட்' தேர்வில் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதை, உங்களுக்கு அடுத்து வரும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். மாணவர்களுக்கு துணையாக இருந்த பெற்றோரையும் பாராட்டுகிறேன். அவர்கள் சோர்வடையும் போதெல்லாம், படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் எடுக்க ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெற்றோர் கேள்வியால் பரபரப்பு

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களை நோக்கி, "நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு நான் பதில் சொல்கிறேன்" என்றார். ஆனால், எந்த மாணவர்களும் எழுந்து கேள்வி கேட்க முன்வரவில்லை. இந்த நேரத்தில், பெற்றோர் தரப்பில் இருந்து சேலத்தை சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி என்பவர் எழுந்து பேச வாய்ப்பு கேட்டார்.

கவர்னர் ஆர்.என்.ரவியும் அவருக்கு 'மைக்' கொடுக்க கோரினார். 'மைக்'கை வாங்கிய அம்மாசியப்பன் ராமசாமி, "நான் சேலம் உருக்காலையில் பணியாற்றுகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக, எங்கள் மாணவர்கள் 'நீட்' தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது? என தெரியாமல் இருந்தனர். இப்போது, தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். ஒரு பெற்றோராக நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். 'நீட்' விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் தருவீர்கள்" என்றார். அவரது இந்த கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. பாரதியார் மண்டபமே பரபரப்பு அடைந்தது.

கவர்னர் ஆவேசம்

அந்த நேரத்தில், மேடையில் நின்றபடி பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ஆவேசமாக தனது கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவர், "நான் ஒருபோதும், எந்த காலத்திலும் 'நீட்' விலக்கு மசோதாவுக்கு அனுமதி வழங்க மாட்டேன். மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக உருவாவதை நான் விரும்பவில்லை. மாணவர்கள் எல்லாவற்றையும் நிறைவு செய்து சிறந்த இடத்துக்கு வர வேண்டும். அதை இங்குள்ள மாணவர்கள் இப்போது நிரூபித்து காண்பித்து உள்ளனர்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அம்மாசியப்பன் ராமசாமி, "எங்கள் மாணவர்கள் சாதித்துள்ளனர். தமிழக பாடத்திட்டம் சிறப்பானதாக உள்ளது. இதுபோன்ற சாதனைகளை 'நீட்' தேர்வு இல்லாதபோதே தமிழக மாணவர்கள் செய்து இருக்கின்றனர்" என்றார்.

அதிக அளவில் செலவு

அதற்கு பதில் அளித்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, "நீங்கள் என்ன சாதித்துள்ளீர்கள்?. 'நீட்' தேர்வு இல்லாமல் நீண்டகால சாதனைகளை உங்களால் தொடர முடியாது. நீங்கள் அமருங்கள். சைக்கிளில் செல்வதுதான் வேகம் கிடையாது. அதைவிட வேகமாக செல்ல வேண்டி உள்ளது" என்றார். அப்போதும் விடாமல், அம்மாசியப்பன் ராமசாமி, "பெற்றோர் தங்கள் குழந்தைகள் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, அதிக அளவிலான பணத்தை செலவு செய்துள்ளனர். மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்றார்.

அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி நீண்ட விளக்கம் அளித்து பேசியதாவது:-

ஒப்புதல் அளிக்க மாட்டேன்

நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். 'நீட்' விலக்கு மசோதாவுக்கு நான் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. 'நீட்' தேர்வு விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் உள்ளது. அதற்கு, ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரத்தை என்னிடம் வழங்கினால், கண்டிப்பாக நான் 'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்.

'நீட்' தேர்வுக்கு பயிற்சி ஏதும் பெறாமல் மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டியது பள்ளிகளின் கடமை. பல பகுதிகளில் உள்ள பள்ளிகள் மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி வழங்கி உள்ளன. பயிற்சி மையத்துக்கு சென்றால் மட்டுமே 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என யாராவது கூறினால் அது கற்பனையே.

தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது

உங்கள் பாடத்திட்டம் சரியில்லை என்றால், மற்றொரு பாடத்திட்டத்தை குறைசொல்ல வேண்டாம்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மிக சிறப்பானது. 'நீட்' தேர்வு இந்த நாட்டில் இருக்கும். நம் மாணவர்கள் போட்டித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுவர். நம் மாநிலத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை

'நீட்' தேர்வுக்கு முன்பு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புக்கு கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை பெறப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத நிலை இருந்தது. குறைவான தகுதி உள்ள மாணவர்கள் கூட, அதிகளவிலான பணம் கொடுத்து மருத்துவ இடங்களை பெற்றனர். 'நீட்' தேர்வை அறிமுகம் செய்வதற்கு முன்பு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், 2019-2020-ம் ஆண்டில், தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது.

அதன்பிறகு, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 600 வரை உயர்ந்தது. 'நீட்' தேர்வுக்கு முன்பு மருத்துவ படிப்பில் 100-க்கும் குறைவாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 'நீட்' தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 600 ஆக அதிகரித்துள்ளது. இதுதான், 'நீட்' தேர்வின் சிறப்பு.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

பெற்றோர் வரவேற்பு

கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்துக்கு ஏனைய பெற்றோர் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய மாணவர்கள் சிலர், 'நீட்' தேர்வுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வு எழுதி, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்புக்கு சேர்ந்த மாணவர்கள் யாரும் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.


Next Story