உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 29-ந் தேதி கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்திருவிழா நேற்று மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தேரை வடம்பி்டித்து இழுத்தனர்
இதையடுத்து காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகளந்தபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரானது கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நிலைக்கு வந்தது. இதில் திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், துணைத் தலைவர் உமாமகேஸ்வரிகுணா, ஆணையாளர் கீதா, நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி, நகராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரிராஜா, ரவிக்குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருக்கோவிலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தெப்ப உற்சவம்
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மட்டையடி உற்சவமும், மாலையில் புஷ்ப யாகமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)மற்றும் 10-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பவர் ஏஜென்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.