"சாதி அடிப்படையில் பணி மாறுதல்" - பேஷன் டெக்னாலஜி நிறுவன இயக்குனர் மீது புகார்; சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!


சாதி அடிப்படையில் பணி மாறுதல் - பேஷன் டெக்னாலஜி நிறுவன இயக்குனர் மீது புகார்; சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!
x

இதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த உதவி இயக்குநர் இளஞ்செழியன் மீது அனிதா மேபெல் மனோகரன் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை,

சென்னை தரமணியில் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்(என்ஐஎப்டி) செயல்பட்டு வருகிறது. . இந்நிறுவனம் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் இயக்குநராக அனிதா மேபெல் மனோகர் என்பவர் பணியாற்றி வருகின்றார். இதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த உதவி இயக்குநர் இளஞ்செழியன் மீது அனிதா மேபெல் மனோகரன் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக நிர்வாகப் பிரிவு மூத்த உதவி இயக்குநரான இளஞ்செழியனின் அலுவலகம் கல்வி நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்த அலுவலகத்தை மாணவர் விடுதிக்கு மாற்றி உத்தரவிட்ட இயக்குநர் அனிதா, அந்த அலுவலகத்தை உயர் வகுப்பை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் பயன்படுத்த கொடுத்துள்ளார்.

இதனை எதிர்த்து மூத்த உதவி இயக்குநர் இளஞ்செழியன் டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதியதை அடுத்து டெல்லி அதிகாரிகள் விசாரணை செய்து மீண்டும் பிரதான கட்டிடத்திலேயே அலுவலகம் ஒதுக்க உத்தரவிட்டனர். ஆனால் அனிதா அதை செயல்படுத்தாமல் மூத்த உதவி இயக்குநர் இளஞ்செழியனை அதே விடுதி அலுவலகத்தில் இயங்க வற்புறுத்தியுள்ளார்.

உயர் அதிகாரிகள் உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து சாதிய வன்மத்துடன் இயங்கி வரும் அனிதா மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தரமணி உதவி ஆணையரிடம் இளஞ்செழியன் புகார் அளித்தார். கடந்த 8-ம் தேதி இந்த புகாரின் மீது தரமணி போலீஸார் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், அனிதா அளித்த புகாரின் பேரில் இளஞ்செழியன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் தரமணி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த குற்றசாட்டு பொய் என நிறுவனத்தின் உள் புகார்கள் குழுவால் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய இயக்குனர் மீதான புகாரில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அனிதா மாபெலின் மனுவை விசாரித்த கோர்ட்டு, விசாரணை என்ற பெயரில் மனுதார‌ரை துன்புறுத்தக் கூடாது என ஆணையிட்டது. மேலும், இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story