தீபாவளியையொட்டி களைகட்டிய வாரச்சந்தை: செஞ்சியில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை


தீபாவளியையொட்டி களைகட்டிய வாரச்சந்தை:  செஞ்சியில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:45 PM GMT)

தீபாவளியையொட்டி செஞ்சி வாரச்சந்தை நேற்று களைக்கட்டியது. இதில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

விழுப்புரம்


செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தையில் ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்குவதற்காக தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து, போட்டி போட்டு வாங்கி செல்வது வழக்கம்.

அந்த வகையில், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் அசைவத்துக்கும் ஒரு இடம் உண்டு.

அசைவ பிரியர்கள் அதிகாலையிலேயே இறைச்சி கடைகளுக்கு சென்று ஆட்டு இறைச்சியை வாங்கி செல்வார்கள். இதனால் அன்றைய தினம் ஆட்டு இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இதை எதிர்நோக்கி, இறைச்சி கடைக்காரர்களும் அதிகளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதற்கு பெரும்பாலான வியாபாரிகள் செஞ்சி வாரச்சந்தையை எதிர்நோக்கி வருவதுண்டு.

ரூ.5 கோடிக்கு விற்பனை

அந்த வகையில் வெள்ளிக்கிழமையான நேற்று செஞ்சி வாரச்சந்தையில் ஆட்டு சந்தை நடைபெற்றது. இதில் விவசாயிகளும் ஆடுகளை வளர்ப்பவர்களும் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் வாரச்சந்தை களைக்கட்டி காணப்பட்டது.

அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையானது. இதில் ரூ. 5 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஆட்டு சந்தை 4 மணிநேரத்தில் முடிந்த நிலையில், அதை தொடர்ந்து நடந்த வாரச்சந்தையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.


Next Story