சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த ஆடு
கொரடாச்சேரி அருகே சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த ஆடு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராடி மீட்டனர்.
கொரடாச்சேரி அருகே சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த ஆடு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராடி மீட்டனர்.
உயிருக்கு போராடிய ஆடு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் அரசு பள்ளி மைதானத்தில் சிறுவர்கள் சிலர் சம்பவத்தன்று கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பந்து பள்ளிக்கூட கட்டிடம் அருகில் விழுந்தது. அந்த பந்தை மாணவர்கள் எடுக்க சென்ற போது பள்ளிக்கூடத்தின் சுவர்களுக்கு இடையில் ஆடு ஒன்று சிக்கி, வெளிவர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. மேலும் அந்த ஆடு வலியால் கத்திக்கொண்டு இருந்தது.
பத்திரமாக மீட்பு
இது குறித்து மாணவர்கள் உடனடியாக தங்களுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஆட்டை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். அப்போது இரவு நேரமாகி விட்டதால் டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் மீட்பு பணி நடந்தது. ஆடு சிக்கி இருந்த இருபக்க சுவர்களின் சிமெண்டு காரைகளை லேசாக பெயர்த்து, ஆட்டுக்கு காயம் ஏற்படாத வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு அதை பத்திரமாக மீட்டனர்.
இந்த மீட்பு பணி 1 மணி நேரம் நடந்தது. ஆட்டை மீட்கும் பணியை அந்த பகுதியை சேர்ந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் போராடி ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.