சாலையில் ஓய்வெடுக்கும் ஆடுகள்
கோவை டாடாபாத் பகுதியில் சாலையில் ஆடுகள் ஓய்வெடுப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
கோவை டாடாபாத் பகுதியில் சாலையில் ஆடுகள் ஓய்வெடுப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சாலையில் ஆடுகள்
கோவை மாநகர பகுதியில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. ஏற்கனவே பெருகி வரும் வாகனங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சாலையில் கால்நடைகள் சொகுசாக படுத்து ஓய்வெடுப்பதுடன், அங்குமிங்கும் சுற்றி வருகிறது. இதனால் சில பகுதிகளில் தினமும் விபத்து ஏற்பட்டு வரும் நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக கோவை டாடாபாத்தில் இருந்து ரத்தினபுரி நோக்கி செல்லும் அழகப்பா சாலையில் சுற்றும் ஆடுகளால் தினமும் விபத்து நடந்து வருகிறது. சாலையின் நடுவே ஏராளமான ஆடுகள் படுத்து உறங்குகின்றன.
அதிகரிக்கும் விபத்துகள்
பின்னர் திடீரென்று அங்கிருந்து எழுந்து செல்லும் ஆடுகள், சாலையை கடந்து மறுபுறம் செல்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆடுகளின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது தவறி கீழே விழுந்து சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பித்துச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. இது குறித்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
இங்குள்ள சாலையின் நடுவே 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுத்துக்கொள்கிறது. பின்னர் அந்த ஆடுகள் அங்குமிங்கும் தடையில்லாமல் உலா வருகிறது. இங்கு 2 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டுவிட பெற்றோர் பலர் இருசக்கர வாகனங்களில் வருகிறார்கள். அப்போது இந்த ஆடுகள் குறுக்கே விழுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
தகராறு
மேலும் இந்த ஆடுகள் அனைத்துமே அந்தப்பகுதியை சேர்ந்தவைகள்தான். அவற்றை உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வளர்ப்பது இல்லை. மாறாக சாலையில் விட்டுவிடுவதால் அதுமீது லேசாக மோதிவிட்டாலே அந்தப்பகுதியை சேர்ந்த பலர் அங்கு கூடி மோதியவர்களிடம் தகராறு செய்யும் நிலையும் நீடித்து வருகிறது.
ஏற்கனவே சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் அவற்றை பிடித்துச்செல்வோம் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்துச்சென்றால் விபத்துகள் ஏற்படுவது குறைந்துவிடும். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.