செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை


செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:47 PM GMT)

ரம்ஜான் படிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

விழுப்புரம்

செஞ்சி

ரம்ஜான் பண்டிகை

செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம். இதில் ஆட்டுச்சந்தை பிரபலமானது. பண்டிகைகாலங்களில் இங்கு ஆடுகள் வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து செல்வதுண்டு.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நடைபெற்ற வார சந்தையில் ஆட்டு சந்தை களை கட்டியது. செஞ்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் அதிகாலை 2 மணியில் இருந்தே தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்தனர்.

போட்டி போட்டு வாங்கினர்

இது தவிர செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை லாரி, மினி லாரிகளில் விற்பனைக்காக இங்கு கொண்டு வந்தனர். நேரம் செல்ல செல்ல ஆடுகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியது.

ஆடுகளை வாங்கி செல்வதற்காக விழுப்புரம் மட்டுமின்றி சென்னை, கடலூர், சேலம், வேலூர், தர்மபுரி மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் மற்றும் பெங்களூருவில் இருந்து வியாபாரிகள் லாரி, மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து தங்கி விட்டனர். இவர்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர்.

ரூ.5 கோடிக்கு விற்பனை

இதில் வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. செஞ்சி வாரச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். வழக்கத்தை விட விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story