பஸ்சில் குழந்தையிடம் தங்க வளையல் 'அபேஸ்'

பஸ்சில் குழந்தையிடம் தங்க வளையலை மர்ம நபர்கள் திருடி சென்றார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நவின்குமார் (வயது 32). இவர் தனது நண்பரின் குழந்தையின் காதுக்குத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுவதற்காக தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவில் மலையடிவாரத்திற்கு வந்துள்ளார். பின்னர் மலைக்கோவில் மேல் செல்வதற்காக பஸ்சில் நவின், அவருடைய மனைவி, மகன் சர்வன்(4) ஆகியோர் பயணம் செய்துள்ளனர். நேற்று முருகன் கோவிலில் வைகாசி விசாக தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால் நின்றுக்கொண்டே பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் மலை கோவிலில் பஸ்சில் இருந்து இறங்கிய நவீன்குமார், மகன் சர்வன் கையிலிருந்த ஒரு பவுன் தங்க வளையல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பஸ் முழுவதும் தேடியும் வளையல் கிடைக்காததால் திருத்தணி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ்சில் வளையலை மர்ம நபர்கள் திருடி சென்றார்களா? அல்லது குழந்தை இடமிருந்து வளையல் தவறி விழுந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.






