65 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை


65 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறையில் 65 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 65 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

தாலிக்கு தங்கம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 65 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 520 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.32 லட்சத்து 25 ஆயிரம் திருமண உதவித்தொகையையும் கலெக்டர் மகாபாரதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண உதவி தொகை

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறை மூலம், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு ஏழ்மை மகள் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்புத்திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கும், மற்றும் அன்னை தெரசா ஆதரவற்ற மகள் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 65 பயனாளிகளுக்கு 520 கிராம் தாலிக்கு தங்கமும், திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம்

இதில் பட்டம் படித்தவர்களான 64 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், பட்டப்படிப்பு நிறைவு செய்யாதவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் காமாட்சி மூர்த்தி, மகேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) சுசீந்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story