நகை செய்து தருவதாக கூறிதொழிலாளியிடம் ரூ.3 லட்சம் தங்கம் மோசடி
விழுப்புரத்தில் நகை செய்து தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் மோசடி
விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் ஸ்ரீதர் (வயது 40), நகை தொழிலாளி. இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மகன் சரவணக்குமார் என்பவரிடம் கடந்த 27.7.2022 அன்று 188.53 கிராம் எடையுள்ள சுத்த தங்கத்தை கொடுத்து அதன் மூலம் 75 ஜோடி ஜிமிக்கிகளை செய்து தருமாறு கூறியுள்ளார்.
இதில் 128.53 கிராம் எடைக்கு நகை செய்து அதனை ஸ்ரீதர் வாங்கியுள்ளார். மீதமுள்ள 60 கிராம் தங்கத்திற்கு ஜிமிக்கி செய்து கொடுக்காமல் சரவணக்குமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பலமுறை அவரிடம் சென்று ஸ்ரீதர் வற்புறுத்தி கேட்டும் சரவணக்குமார், நகை செய்து கொடுக்கவில்லை. மேலும் தான் வாங்கிய தங்கத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
வழக்கு
இதுபற்றி ஸ்ரீதர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பிறகு 1 கிராம் தங்கத்தை மட்டும் ஸ்ரீதருக்கு சரவணக்குமார் திருப்பிக்கொடுத்துள்ளார். மீதமுள்ள 59 கிராம் தங்கத்தை இதுநாள் வரையிலும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.
இதுகுறித்து ஸ்ரீதர், மீண்டும் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணக்குமார் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.