மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு:தங்கம் விலை உயர்வுக்கு காரணமா?


மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு:தங்கம் விலை உயர்வுக்கு காரணமா?
x

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு: தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? இதுகுறித்து வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்

1920-ம் ஆண்டில் ரூ.21-க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது. 103 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 96 மடங்கு விலையேறி இருக்கிறது.

திருமணம், கோவில் கொடைகள் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் தங்க நகைகள் அணிவதை பலரும் கவுரவமாக கருதுவதால் அதன் மீதான மோகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து உயர்வை கண்டாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாற்றில் இடம் பிடித்து வருகிறது.

பதுக்கல்

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கத்தை மொத்த வியாபாரிகள் அதிகளவில் பதுக்கி இருக்கலாம் என்று பரபரப்பு வெளியாகி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை எகிறியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இல்லத்தரசிகளை கதிகலங்க செய்துள்ளது.

தங்கம் விலை 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதுபற்றி தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மேலும் உயர வாய்ப்பு

நாமக்கல்லை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் குமரன்:-

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருவதால், உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தொலைநோக்கு அடிப்படையில் பார்த்தாலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து அபரிமிதமான உயர்வு இருக்கும்.

நமது நாட்டில் தங்கம் உற்பத்தி குறைவாக உள்ள நிலையில், அதிக அளவு தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி சுங்க வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தோம். ஆனால் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரியை குறைப்பதற்கு பதிலாக உயர்த்தி இருப்பது வேதனைக்குரியது. இதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் ஆகும். இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.45 ஆயிரத்தை கடந்துவிட வாய்ப்பு உள்ளது.

வீடு வாங்கி கொடுக்கலாம்

திருச்செங்கோட்டை சேர்ந்த அன்பழகன்:-

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதை பார்த்தால் பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக இனி தங்க நகைகளை வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை கடனை வாங்கியாவது தங்க நகைகளை சீதனமாக வழங்கினால், அதை அணிந்து கொண்டு, அவர்கள் பாதுகாப்பாக வெளியே சென்றுவர முடியுமா? என்பதையும் யோசித்து பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

எனவே இனிவரும் காலங்களில் திருமணத்தின் போது பெண் பிள்ளைகளுக்கு சம்பிரதாயத்துக்கு சில பவுன் நகைகளை மட்டும் வழங்கி விட்டு, மீதம் நகை வாங்குவதற்கான பணத்தில் தங்கள் வசதிக்கு ஏற்ப நிலம் அல்லது வீடு வாங்கி கொடுத்து விடலாம். இதனை அனைவரும் கடைப்பிடித்தால் தங்கத்தின் மீதான மோகம் நிச்சயம் குறையும். தங்கத்தின் மீதான மோகம் குறைந்தால் நிச்சயம் விலையும் குறையும்.

பதுக்கலை தடுக்க வேண்டும்

பரமத்திவேலூரை சேர்ந்த லோகநாயகி:-

ஏற்கனவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் மேலும் உயர்ந்து வருகிறது. எனவே இறக்குமதி வரி உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

ஒருகாலத்தில் தங்கம் பெண்கள் அணிகலன்களாக அணியவே பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது முதலீட்டுக்கான பொருளாக மாறியதே அதன் விலை வேகமாக உயர முக்கிய காரணம் ஆகும். எனவே மத்திய, மாநில அரசுகள் தங்கம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய உச்சம்

எருமப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி சோபிகா:-

தங்கம் விலை ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், குறிப்பாக நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தும் செய்தியாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவே பல குடும்பங்கள் தடுமாறி வருகின்றன. அவர்களுக்கு தங்க ஆபரணங்கள் எட்டாக்கனி போன்று ஆகிவிட்டது.

இருப்பினும் திருமணத்தின் போது பெண் பிள்ளைகளுக்கு தங்கள் தகுதிக்கு தகுந்தாற்போல் நகை போட்டு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். வேறுவழியின்றி பல பெண்கள் பெற்றோர் தங்களுக்கு சீதனமாக வழங்கிய நகைகளைதான் தங்களது பெண் பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றனர். தங்கம் விலை இன்னும் எவ்வளவு உயர போகிறது என்பதை நினைத்தால் கவலை தான் வருகிறது.

ஈர்ப்பு குறைந்து விடும்

நாமக்கல் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்த பூங்கொடி:-

பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் திருமணத்திற்கு இவ்வளவு பவுன் நகைகள் வாங்க வேண்டும் என்று 'பட்ஜெட்' போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் அவர்கள் போட்டு வைத்திருந்த திருமண 'பட்ஜெட்'டை பதம் பார்த்து விட்டது என்றே கூற வேண்டும். தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பதால் நகைக்கு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

'கல்யாணம் செய்து பார். வீட்டைக் கட்டிப் பார்' என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் இப்போதுதான் மக்களுக்கு புரிகிறது. ஒவ்வொரு வகையிலும் செலவு கூடிக்கொண்டே செல்கிறது. தங்கம் விலை இவ்வாறு தொடர்ந்து ஏறிக்கொண்டே போனால் நிச்சயம் அதன் மீதான ஈர்ப்பு குறைந்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story