புனித வெள்ளி சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி முதல் தவக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நேற்று புனித வெள்ளியையொட்டி பேராலய அதிபர் இருதய ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதைதொடர்ந்து நேற்று மாலை பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது.
ஏசுசிலை பாதத்தில் முத்தம்
கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொதுமன்றாட்டுகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தையர்கள் சிலுவையில் உள்ள ஏசுவின் பாதத்தில் முத்தமிட்டனர். அதனைத்தொடர்ந்து ஏசுவின் சிலை பேராலயத்தைச் சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அப்போது பேராலயத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏசு சிலுவையின் பாதத்தில் முத்தமிட்டனர். இதில் பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆட்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் தந்தையரகள், அருள் சகோதரிகள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.