திறப்பு விழாவுக்கு தயாராகும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை


திறப்பு விழாவுக்கு தயாராகும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
x
திருப்பூர்


திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

திருப்பூர்- தாராபுரம் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியானது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.1¼ கோடி மதிப்பில் 5 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

இங்கு தரைத்தளத்தில் எக்ஸ்ரே அறை, ஸ்கேன், பி.எம்.ஆர். ஆய்வகம், சலவையகம், மனநல மருத்துவ பிரிவு, வாகன நிறுத்துமிடம் அமைந்துள்ளது. முதல் தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் எலும்பு மூட்டு பிரிவு, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை பிரிவு, கண் மருத்துவ பகுதி அமைந்துள்ளன. 2-வது தளத்தில் கேத் லேப், இதய சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை தீவிர கண்காணிப்பு பிரிவு, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, ரத்த வங்கி, ஆய்வகம், கல்லூரி முதல்வர் அறை அமைந்துள்ளன.

12 அறுவை சிகிச்சை அரங்கம்

மூன்றாவது தளத்தில் தலா 30 படுக்கைளுடன் 6 பிரத்யேக வார்டு, மருத்துவ ஆவண பாதுகாப்பு அறை, விரிவுபடுத்தப்பட்ட மனநல மருத்துவ பிரிவு உள்ளன. 4-வது தளத்தில் தலா 30 படுக்கைகள் கொண்ட 7 பிரத்யேக வார்டு, மருத்துவ மற்றும் செவிலிய கண்காணிப்பாளர் அறை இடம்பெற்றுள்ளன. 5-வது தளத்தில் மயக்க மருத்துவ இயல் துறை, விரிவுபடுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்டவை உள்ளன.

இதுதவிர 500 படுக்கைகள் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி, எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 12 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் உடனிருப்போர் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 5 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்போது கூடுதலாக வார்டு மற்றும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

சிறப்பு பிரிவுகள்

தரைத்தளத்தில் இருந்து பிற தளங்களுக்கு செல்வதற்கு 5 இடங்களில் விரிவான படிக்கட்டுகள், முதியோர், கர்ப்பிணிகள் அவசர தேவைக்காக 12 இடங்களில் மின்தூக்கி வசதி செய்யப்பட்டுள்ளன. திருப்பூரிலேயே பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு ஆஸ்பத்திரி செயல்பாட்டு வந்தாலும் தேவையான மருத்துவ உபகரணங்கள், கருவிகள் பெற வேண்டும். டாக்டர்கள் எண்ணிக்கை அதிகம் தேவைப்படுகிறது. இருதயம், மூளை, நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்த உயர் அதிகாரிகளுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்


Next Story