அரசு பஸ் டிரைவருக்கு 2½ ஆண்டு சிறை
கோவையில் விபத்தில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில் அரசு பஸ் டிரைவருக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவையில் விபத்தில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில் அரசு பஸ் டிரைவருக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கர்ப்பிணி பெண் பலி
கோவை நீலாம்பூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 36). இவருடைய மனைவி சரஸ்வதி (24). இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியான இவரை கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி மருத்துவ பரிசோதனைக்காக முருகேசன் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கோவை-அவினாசி சாலை சின்னியம்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த 90-ஏ என்ற தடம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக முருகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
2½ ஆண்டு சிறை
இதில் முருகேசன் மற்றும் அவருடைய மனைவி சரஸ்வதி ஆகியோர் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
முருகேசன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு அப்போதைய இன்ஸ்பெக்டர் மரியமுத்து தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அரசு பஸ்சை ஓட்டியது ரமேஷ் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 8-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் விபத்தை ஏற்படுத்தி கர்ப்பிணி பெண் பலியாக காரணமாக இருந்த அரசு பஸ் டிரைவர் ரமேசுக்கு 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.6,500 அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.சரவணபாபு தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கோ.பானுமதி ஆஜரானார்.