நாச்சிப்பாளையத்திற்கு அரசு பஸ் வசதி
நாச்சிப்பாளையத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி
நாச்சிப்பாளையத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
நின்று செல்ல வேண்டும்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். ஆச்சிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் பஸ்கள் ஆச்சிப்பட்டியில் நிற்பதில்லை. இதுகுறித்து கேட்டால் வாக்குவாதம் செய்கின்றனர். குறிப்பாக கோவில்பாளையம், வடக்கிபாளையம் பிரிவில் இறங்க வற்புறுத்துகின்றனர். வடக்கிபாளையம் பிரிவில் பஸ் நிறுத்தமே இல்லை. ஆச்சிப்பட்டிக்கு உரிய கட்டணமாக ரூ.25-க்கு டிக்கெட் தருவதில்லை. பொள்ளாச்சிக்கு உரிய ரூ.28 டிக்கெட் கொடுக்கின்றனர்.
போராட்டம்
குறிப்பாக தனியார் பஸ்கள் ஆச்சிப்பட்டியில் நிற்காமல் பிரச்சினை செய்கின்றனர். மேலும் ஆச்சிப்பட்டியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும். ஆச்சிப்பட்டியில் தனியார் பஸ்கள் நிற்காதது குறித்து ஏற்கனவே பலமுறை மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பஸ் வசதி
நாச்சிபாளையம் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சிபாளையம் கிராமத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ரெட்டியார் மடத்தில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர். தினமும் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று கரட்டுபாளையம் சென்று பஸ் பிடித்து செல்ல வேண்டிய உள்ளது.
மழைக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் மாணவ-மாணவிகள் தனியாக நடந்து வருவதால் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது. எனவே, பள்ளி நேரத்திற்கு வரும் தடம் எண் 27 பஸ் நாச்சிபாளையம் வரை வந்து சென்றால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வசதியாக இருக்கும். எனவே, மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க நிரந்தரமாக அரசு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.