சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்
கொடைக்கானலில், சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியது.
கொடைக்கானலில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை, முருகேசன் என்பவர் ஓட்டினார். கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் டைகர் சோலை என்னுமிடத்தில், பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிற இடத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற கார் ஒன்று திடீர் பிரேக் போட்டதால், பஸ்சை டிரைவர் நிறுத்த முயன்றார். இதனால் எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கி, அருகே இருந்த பாறையில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் டிரைவர் முருகேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வேறு பஸ் வரவழைக்கப்பட்டு மதுரைக்கு பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர்.