அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
பாளையங்கோட்டையில் அரசு பஸ்-மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
பாளையங்கோட்டையில் அரசு பஸ்-மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
நண்பர்கள்
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் துரை (வயது 35), சுப்பிரமணியன் (39), முருகேசன் (33). நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து மருதூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 4 வழிச்சாலையை கடக்க முயன்றனர்.
வாலிபர் பலி
அப்போது அந்த வழியாக நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு அரசு பஸ் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த துரை, சுப்பிரமணியன், முருகேசன் ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் நேற்று இரவில் பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணியன், துரை ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் ஜார்ஜ் (50). கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வந்த அவர் பாளையங்கோட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் நேற்று காலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.