இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி
விபத்தில் காயமடைந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
பொள்ளாச்சி
விபத்தில் காயமடைந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
விபத்தில் காயம்
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் ஆழியாறு அருகே 3-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் இறந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தராஜ் என்பவருக்கு வலது கை செயல் இழந்தது.
இதை தொடர்ந்து அவர் இழப்பீடு கேட்டு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் மனுதாரருக்கு இழப்பீடு தொகை ரூ.13 லட்சத்து 16 ஆயிரத்து 947-ம், அதற்குரிய வட்டி தொகை யையும் சேர்த்து மொத்தம் ரூ.24 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.
அரசு பஸ்கள் ஜப்தி
ஆனால் அந்த இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகனவள்ளி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்களை ஜப்தி செய்வதற்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்களுடன் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்ல இருந்த 2 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் மீரான் மொய்தீன் ஆஜரானார்.