தூய்மை பணியாளர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும்
ஒப்பந்தமுறையை ரத்து செய்து தூய்மை பணியாளர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.
தஞ்சாவூர்;
ஒப்பந்தமுறையை ரத்து செய்து தூய்மை பணியாளர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.
ஆய்வு
தஞ்சை வடக்குவாசலில் உள்ள தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகளை நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர், தூய்மை பணியாளர்களின் நிறை, குறைகளை கேட்டறிந்ததுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் பெற்று கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வலியுறுத்த உள்ளோம்
தூய்மை பணியாளர்களுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளதைபோல் மாநில அளவிலும் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.ஏற்கனவே 11 மாநிலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு கடன் உதவி அளிக்கும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதேபோல தமிழகத்திலும் அமைப்பு உருவாக்குவது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
ஒப்பந்தமுறை ரத்து
தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் நல வாரியம் உள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்களுக்கான ஆணையம் இல்லை. ஆணையம் அமைக்கப்பட்டால், தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு அந்தந்த மாநிலத்தில் தீர்வு காண முடியும். ஒப்பந்த பணிமுறையை ரத்து செய்து அரசே தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.ஒப்பந்த நிறுவனங்கள் தூய்மை பணியாளர்களுக்கான பி.எப்., இ.எஸ்.ஐ., தொகையை முறையாக செலுத்துவதில்லை. எனவே தமிழக அரசு தனியார் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் விஷவாயு தாக்கி 225 பேர் இறந்துள்ளனர். இதனை தடுக்க தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பாதாள சாக்கடையின் உள்ளே சுத்தம் செய்வதற்கான எந்திரம் குறைவாக உள்ளது. போதிய அளவில் எந்திரங்களை கொண்டு பணிகள் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர் ஜெய்சதீஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கூட்டம்
பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தூய்மை பணியாளர்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் கலெக்டர்(வருவாய்) சுகபுத்ரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.