அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?


அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?
x

அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது குறித்து நோயாளிகள், பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்

அரசாங்கத்தின் அக்கறையும்..., டாக்டர்களின் அலட்சியமும்...

நாட்டு மக்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றது. அந்த வகையில் தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17 ஆயிரத்து 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏழை-எளிய, பாமர மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த ஆஸ்பத்திரிகள்-61, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி-1, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள்-18, வட்டம்/வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள்-272, ஆரம்ப சுகாதார நிலையங்கள்-1,804, துணை சுகாதார நிலையங்கள்-8 ஆயிரத்து 713, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்-463 ஆகிய எண்ணிக்கையில் ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.

'நடமாடும் மருத்துவமனை திட்டம்', 'மக்களை தேடி மருத்துவ திட்டம்', 'இன்னுயிர் காப்போம் திட்டம்' போன்ற புதுமையான திட்டங்களும் மருத்துவத்துறையில் புகுத்தப்பட்டு வருகின்றன.

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

மருத்துவத்துறையின் வளர்ச்சி, மேம்பாட்டை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில அரசு டாக்டர்கள் பணியில் அலட்சிய போக்கை கடைபிடித்து அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை பெரியார்நகர் ஆஸ்பத்திரிக்கு கால்தசை பிடிப்புக்கு சிகிச்சை பெற சென்ற வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (வயது 17) டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தனது காலை இழந்து, பின்னர் உயிர் இழந்திருப்பது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரியாவின் மரணம் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தையும், அவப்பெயரையும் உண்டாக்கி உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக அரிய வகை அறுவை சிகிச்சைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறுவது சாதனையாக பார்க்கப்படும் வேளையில் தவறான சிகிச்சைக்கு பிரியா பலியாகி இருப்பது மிகுந்த வேதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது பற்றி நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

டாக்டர்களை நியமிக்க வேண்டும்

ராசிபுரம் சமூக ஆர்வலர் குபேர்தாஸ்:-

கடந்த 1934-ம் ஆண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. ராசிபுரம் டவுன் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். மருந்து, மாத்திரைகளும் கிடைத்து வருகின்றன.

ஆனால் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மழைக்காலங்களில் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகாமல் பாதுகாக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு ஒருவர் கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்கு சென்றால், அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க எலும்பு பிரிவு டாக்டர் இல்லை. சேலத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் விபத்தில் பாதிக்கப்படுவோர் பெரும் பொருட் செலவுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அதேபோல் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்றால் சம்பந்தப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க இருதய சிகிச்சை டாக்டர் இல்லை. சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட ஸ்கேன் வசதி இல்லை. இதனால் நோயாளிகளுக்கு பொருட் செலவும், அலைச்சலும் அதிகரிக்க செய்கிறது. எனவே ராசிபுரம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் டாக்டர்களை நியமிக்க வேண்டும். அனைத்து வகையான ஸ்கேன் எந்திரங்களும் வரவழைத்து நோயாளிகள் பயன் பெற செய்ய வேண்டும்.

உயிரிழக்க நேரிடுகிறது

பரமத்திவேலூரை சேர்ந்த செந்தில்:-

எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு தான் சிகிச்சைக்கு செல்வேன். எனது உறவினர்களையும் இங்கு தான் அழைத்து வருவேன். பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின்‌ எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.

கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் ‌‌‌அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல், சேலம் அல்லது கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால்‌ விபத்தில் சிக்கியவர்கள் மேல் சிகிச்சைக்காக செல்லும் வழியிலேயே உயிரிழக்க நேரிடுகிறது. எனவே மருத்துவமனையை மேம்படுத்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு வேலூர் அரசு மருத்துவமனையிலேயே மேல்சிகிச்சை அளிக்க தேவையான டாக்டர்களை நியமிக்க‌ வேண்டும்.

குறைகூற கூடாது

வெண்ணந்தூர் அருகே உள்ள வைகுந்தம் பகுதியை சேர்ந்த நோயாளி முத்து:-

எனக்கு கால்வலி அதிகமாக இருந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தேன். இங்கு உள்நோயாளியாக அனுமதித்து மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். தற்போது வலி குறைந்து உள்ளது.

இந்த மருத்துவமனை சுகாதாரமான முறையில் வைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளன. டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கண்ணியத்துடன் நடந்து கொள்கிறார்கள். எங்கோ சில டாக்டர்கள் அலட்சியமாக உள்ளதற்கு ஒட்டுமொத்தமாக அனைத்து டாக்டர்களையும் குறைகூற கூடாது.

பணம் இல்லை

திருச்செங்கோட்டை சேர்ந்த நாடக நடிகர் எம்.ஜி.ஆர். சண்முகம்:-

எனக்கு காய்ச்சல், தலைவலி என்று என்ன பிரச்சினை வந்தாலும், உடனடியாக நான் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு தான் செல்வேன். அங்கு ஏழை, பணக்காரர்கள் என பாகுபாடின்றி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றால் டாக்டர் கட்டணம், மருந்து, மாத்திரைக்கு தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனவே தான் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்கிறேன். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியை இன்னும் தரம் உயர்த்தி உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால், என்னை போன்ற ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி

மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன்:-

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம், வெண்ணந்தூர், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலையில் அரசு ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை விட நவீன தொழில்நுட்பம் கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கட்டணம் பெறுகிறார்கள். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2,500 மட்டுமே கட்டணம் பெறப்படுகிறது. அதிலும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை வைத்திருந்தால் இலவசமாக, அதாவது கட்டணம் ஏதும் இன்றி எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதேபோல் தனியார் மருத்துவமனைகளை போன்று லேப்ராஸ்கோபி முறையிலும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இதுதவிர இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை என அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்கி வருகிறது. தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளன. பச்சிளங் குழந்தைகள் பிரிவில் எடை குறைவாக பிறந்த ஏராளமான குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. அவசர சிகிச்சையை பொறுத்த வரையில் முன்பெல்லாம் நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 நோயாளிகள் மட்டுமே வருவார்கள் ஆனால் இங்கு அளிக்கப்படும் தரமான சிகிச்சையால் தற்போது தினசரி 100 பேர் வரை வந்து செல்கிறார்கள்.

நாமக்கல்லுக்கு 2-வது இடம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் ஓரிரு படுக்கைகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நிரம்பி உள்ளன. வெளிநோயாளிகள் சுமார் 1,800 பேர் வரை தினசரி சிகிச்சை பெறுகிறார்கள். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 8 அரசு ஆஸ்பத்திரிகளிலும் 745 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் சுமார் 600 படுக்கைகள் நிரம்பி காணப்படுகிறது. இதுதவிர சுமார் 3 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாக வந்து செல்கிறார்கள். இதுவே அரசு ஆஸ்பத்திரிகளின் சேவைக்கு சாட்சி ஆகும்.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகள் ஏற்கனவே தேசிய தரச்சான்றிதழ் பெற்று உள்ளன. தற்போது குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியும் தேசிய தரச்சான்றிதழை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சுகாதார மாநாட்டில் 17 குறியீடுகளின் அடிப்படையில் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் நாமக்கல் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story