ஆற்றில் கொட்டப்பட்ட அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள்


ஆற்றில் கொட்டப்பட்ட அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள்
x

ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன.

அரியலூர்

தா.பழூர்:

மருந்து, மாத்திரைகள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூரில் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது.

காலாவதியாகாதவை

இதில் சில மருந்துகள் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி ஆகும் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அவற்றை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலாவதி ஆகாத மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story