இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு: அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடர்பாக விசாரிக்கப்படும் மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்

இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை குறித்து விசாரிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை குறித்து விசாரிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலவச வீடு கட்டும் திட்டம்
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பலர், தங்களுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றனர். ஆனால், இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை.
அதாவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இந்த திட்டத்தின்கீழ் தகுதியானவர்களாக கருதி, நிதி ஒதுக்கி உள்ளனர். ஒரே வீட்டை காண்பித்து 2 பேர் பெயருக்கு நிதி அளிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு பயனாளி 2020-ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார்.ஆனால் அவர் அதன்பின்பு அரசு அலுவலகத்தில் விரல் ரேகை வைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. இதில் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
நடவடிக்கை
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.






