மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி கார் மோதல்; கணவர் கண்முன்னே பெண் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி கார் மோதல்; கணவர் கண்முன்னே பெண் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி வந்த கார் மோதிய விபத்தில் கணவர் கண்முன்னே பெண் பரிதாபமாக பலியானார்.

காஞ்சிபுரம்

ஓட்டலுக்கு செல்ல...

சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுஜாதா (வயது 30). இவர்களது மகன் சாம்சரன் (5). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் துரைப்பாக்கத்திலிருந்து மதுராந்தகம் நோக்கி வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டி வந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த 3 பேரும் உணவு சாப்பிடுவதற்காக எதிர்புற சாலையில் உள்ள ஓட்டலுக்கு செல்ல சாலையை கடந்து சென்றனர்.

பெண் பலி

அப்போது, மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி பயணித்து வந்த அரசுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று சாலையின் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சுஜாதா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் 5 வயது மகன் சாம்சரன், கணவர் சுரேஷ் ஆகியோர் காயமின்றியும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னே பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தத்தனூர் வளத்தான்ஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (34). இவர் கடந்த 4-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேசனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள சுந்தரேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரேசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து சம்பந்தமாக ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story