அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்
அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தர்மபுரி:-
அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கிஅனைத்து துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். கலெக்டர் சாந்தி வரவேற்றார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரிமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு நடத்திய போது அங்கு பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இனிமேல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்தகைய சூழல் ஏற்படாமல் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள், புகார்கள் மீது உரிய கவனம் செலுத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தான உணவு
காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் உணவு சாப்பிடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளில் அரசு விதிமுறைகள் படி தரமான சத்தான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிலுவையில் உள்ள சாலைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்சினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, தர்மபுரி எம்.பி.செந்தில் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, எஸ் பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி பி. பழனியப்பன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏ.டி.எம். கார்டுகள்
தர்மபுரி மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்கு துறை சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம் கார்டுகள் வழங்கும் விழா தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம் கார்டுகளை வழங்கினார். விழாவில் உதவி கலெக்டர் கீதா ராணி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, ஜெயசெல்வம், ஆறுமுகம், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா நன்றி கூறினார்.