இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்


தினத்தந்தி 5 Nov 2022 6:45 PM GMT (Updated: 5 Nov 2022 6:45 PM GMT)

காரைக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம் உள்ளதால் அந்த பகுதியில் உள்ள நூலகத்தில் தற்காலிகமாக பள்ளி வகுப்பறை செயல்பட்டு வருகிறது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம் உள்ளதால் அந்த பகுதியில் உள்ள நூலகத்தில் தற்காலிகமாக பள்ளி வகுப்பறை செயல்பட்டு வருகிறது.

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது களத்தூர் ஊராட்சியில் அம்மனாபட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த பள்ளியில் மராமத்து பணிகள் நடைபெற்றது. தற்போது இந்த பள்ளிக்கட்டிடம் மேல் பகுதி மற்றும் அதன் சுவர்கள் மிகவும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது இந்த பள்ளியின் மேற்கூரை பூச்சு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் அந்த கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதாக கூறி பெற்றோர் தங்களது குழந்தைகளை இந்த பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

இதையடுத்து அந்த பள்ளி கட்டிடத்தில் இருந்து அருகில் உள்ள நூலகத்திற்கு பள்ளி மாணவர்களை மாற்றி தற்போது அந்த நூலகத்தில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது.

புதிய கட்டிடம் தேவை

மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மோசமான நிலையில் உள்ள 70-க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்களை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே இந்த பள்ளி கட்டிடத்தையும் அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகளை அனுப்ப மறுப்பு

இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் கூறியதாவது-

சமுதாயத்தில் பள்ளிக்கூடம் என்பது எதிர்காலத்தில் பெரிய கல்வியாளர்களை உருவாக்கும் வகையில் பள்ளி மாணவர்களை பட்டை தீட்டும் இடம் ஆகும். தமிழக அரசு கல்வித்துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வரும் நிலையில் இதுபோன்று மிகவும் பழுதான பள்ளி கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி பல்வேறு நவீன வசதியுடன் பள்ளி கட்டிடத்தை கட்ட வேண்டும்.

தற்போது இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் உள்ளதால் இந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கி வருகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story