குடிநீருக்காக கிணறுகளை தேடி அலையும் அரசு பள்ளி மாணவர்கள்
பாக்கம்பாடியில் குடிநீருக்காக கிணறுகளை தேடி அரசு பள்ளி மாணவர்கள் அலைந்து திரிந்து வருகின்றனர்.
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம்பாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பறை பலத்த சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதையடுத்து புதிதாக கட்டப்பட்டு வந்த கழிப்பறை கட்டிட பணியும் பாதியில் நிறுத்தப்பட்டு, அந்த கட்டிடமும் தற்போது சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் வசதியும் இல்லை. இதனால் குடிநீருக்காக மாணவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை தேடி அலைகின்றனர். இதன்காரணமாக மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சுற்றுச்சுவர்
இது தவிர சுற்றுச்சுவர் வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து மதுகுடிப்பது, சூதாடுவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு தேவையான கழிப்பறை, குடிநீர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.