தஞ்சை லாட்ஜில் அரசு ஊழியர் மர்ம சாவு
தஞ்சை லாட்ஜில் அரசு ஊழியர் மர்ம சாவு
தஞ்சை லாட்ஜில் அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு ஊழியர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் ராமலிங்கம்(வயது 35). இவர், ஒரத்தநாடு தாலுகாவில் தொண்டராம்பட்டு மேற்கு கிராம உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் தஞ்சை வந்த இவர், தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அறைக்கதவை தட்டினர். ஆனால் அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
மர்ம சாவு
இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். பின்னர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ராமலிங்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் ராமலி்ங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.