காய்கறிகள், பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்


காய்கறிகள், பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
x

காய்கறிகள், பழங்களை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

கடந்த சில நாட்களாக நெல்லை சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.2 என்ற மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த உழவர்கள் சந்தைக்கு கொண்டு வந்த பல்லாயிரம் கிலோ வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி அழித்திருக்கின்றனர்.

கொள்முதல் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள்-பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதலாக வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story