பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x

தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா பொலவக்காளிபாளையம், இந்திரா நகரை சேர்ந்த பட்டியலின அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நவீன்குமார், கிருபாகரன் மீது 21.11.2023 அன்று சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்கொடுமை செயலை செய்த 20 நபர்கள் மீது 24.11.2023 அன்று வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

சாதி ஆதிக்க சக்திகள் இச்சம்பவத்தை திசைதிருப்பும் வகையிலும் தாங்கள் செய்த குற்றச் செயலை மறைத்திட கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு இளைஞர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி, காவல்துறையும் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தாக்குதலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை குற்றவாளிகள் 20 பேர் மீதான வழக்கினை ரத்து செய்திட வேண்டும் என சாதிய ரீதியாக அணிதிரண்டு மறியல் நடத்திய சம்பவம் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமேயாகும்.

சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறி செயலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும். தமிழ்நாடு அரசு, பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த இளைஞர்களுக்கு மருத்துவ உதவிகளும், உரிய இழப்பீடும் வழங்கிட தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது."

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story