ஜவுளிப்பூங்கா அமைக்க அரசு மானியம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜவுளித்துறையின் கட்டமைப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். இதற்காக திட்ட மதிப்பீட்டில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுப்பயன்பாட்டுக்கான கட்டிடங்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.2½ கோடி அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த ஜவுளி பூங்காக்கள் மூலம் பொருளாதார வளர்ச்சி அடைவதோடு, வேலைவாய்ப்பும் பெருகும். இதுமட்டுமின்றி அதிகளவில் அந்நிய செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் அரசு மானியம் பெற்று ஜவுளிப்பூங்கா தொடங்க முன்வரலாம். இது தொடர்பாக கரூர் தாந்தோணிமலையில் செயல்படும் துணி நூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்து உள்ளார்.