"சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் கவர்னர் செயல்படுகிறார்" - பீட்டர் அல்போன்ஸ்
சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழக கவர்னர் செயல்படுகிறார் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் நேற்று நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மை இன மாணவர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 23 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.7 கோடியே 11 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை சரிசெய்ய தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையிலும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கும். இது அவரது பதவிக்கு ஒவ்வாத செயல். தமிழகத்தை வன்முறை களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை செய்யவும் முயற்சிக்கிறார்கள்.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கவர்னர் இவ்வாறு நடந்து வருகிறார்கள். மத்திய அரசு பின்னால் இருந்து இந்த வேலைகளை செய்கிறதோ? என்ற எண்ணம் தோன்றுகிறது. 50 ஆண்டுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருப்பது மிகப்பெரிய அவமானம் ஆகும். இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி. கேரளா, தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர்கள் தங்களின் செயல்பாடுகளை கைவிட வேண்டும். சனாதானத்தின் சோதனைக்களமாக கோவையை, கொங்கு மண்டலத்தை மாற்ற முயற்சி நடக்கிறது.
ஜி.எஸ்.டி. மூலம் அதிக வருவாயை தமிழகம் அளித்து வரும் நிலையில் இந்தி மொழியை மட்டும் அலுவல் மொழியாக்கினால் மத்திய அரசு பணியிடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விடும். அமித்ஷா தெரிவிப்பதுபோல் காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் இல்லை. காங்கிரசை அழிக்க ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்பார் என நம்புகிறோம். குஜராத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.