கிண்டி ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் அம்பேத்கர் சிலை புதிதாக நிறுவப்பட்டுள்ளது. அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று, கவர்னர் ஆர்.என்.ரவி அந்த சிலையை திறந்து வைத்தார். அம்பேத்கரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்துக்கு, ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, கவர்னரின் மனைவி லட்சுமி உடன் இருந்தார். சமூகத்துக்கு அம்பேத்கர் அளித்த பங்களிப்புகள் குறித்து மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். பின்னர், ராஜ்பவன் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை வடிவமைத்த சிற்பி கிஷோர் ஜே.நாகப்பா மற்றும் ஸ்பான்சர் செய்த மாமன்னர் ஒண்டிவீரன் அறக்கட்டளை நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
தொலைநோக்கு பார்வை
இந்த நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைகள் நமது நாட்டின் எதிர்காலத்தை பற்றியும், வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை பற்றியதாகவும் இருந்தது. ஜம்மு-காஷ்மீருக்கான இருதரப்பு நிலைப்பாட்டுக்கு எதிராக அம்பேத்கர் இருந்தார். அதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றார். அப்போது அம்பேத்கருடைய அந்த ஆலோசனைகள் கேட்கப்பட்டிருந்தால், இப்போது விஷயங்கள் அமைதியாகவும் முன்னேற்றமாகவும் இருந்திருக்கும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பை மேற்கொள்ள, தங்களது எண்ணங்கள், செயல்கள் மற்றும் தத்துவத்தை ஆழமாக ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எல்.முருகன்
நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச்செயலாளர் இறையன்பு, கவர்னரின் தலைமை செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டில், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், மத்திய-மாநில சட்ட பிரதிநிதிகள், சென்னை பார் அசோசியேஷன் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.