கவர்னர் தமிழக மக்களுக்காக செயல்பட வேண்டும் - துரை வைகோ


கவர்னர் தமிழக மக்களுக்காக செயல்பட வேண்டும் - துரை வைகோ
x

கவர்னர் தமிழக மக்களுக்காக செயல்பட வேண்டும் என துரை வைகோ கூறியுள்ளார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு 17 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 30-க்கு மேல் தாண்டி உள்ளது. ஆன்லைன் அவசர சட்டம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட பின்னரும், கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அவர் கேட்ட கேள்விகளுக்கும் சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இருந்த போதிலும் தற்போது வரை அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது ஒரு பெரிய சாபக்கேடு என்று தான் சொல்லுவேன். தமிழக கவர்னர் தமிழக மக்களுக்காக செயல்பட வேண்டும். 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

கவர்னர், தனது கடமையை முதலில் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு தனிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு சார்பாக, ஒரு சித்தாந்தத்திற்கு சார்பாக, அவர் தொடர்ந்து குரல் கொடுப்பதும், பணி புரிவதும் ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயக நாட்டில் இப்படி செயல்படுவது, மிகப்பெரிய ஜனநாயக கேடு என்று தான் சொல்லுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story