ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை


ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
x

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுக்கோட்டை

ஆன்லைன் சூதாட்டம்

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு கவர்னர் கையெழுத்திட்ட பின்பும் அரசாணை வெளியிடாதது குறித்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாரே? என நிருபர்கள் கேட்ட போது அதற்கு அவர் பதில் அளித்ததாவது:- இந்தியாவுக்கு முன் மாதிரியான ஒரு சட்டம் இணையவழி விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குமுறை படுத்துதல் ஆகும். இதுவரைக்கும் தடை செய்கிற சட்டம் மட்டும் தான் இயற்றப்பட்டது. இதனை கோர்ட்டுகள் ரத்து செய்துவிட்டன. எனவே இதனை சிந்தித்து ஆலோசனைகளை பெற்று இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துதல் மற்றும் தடை செய்தல் என சட்டத்தை கொண்டுவந்தோம். அவசர சட்டத்தை அரசிதழில் வெளியிட்டு விட்டோம். அதன்பின் சட்டமன்றம் கூடுகிற தேதி அறிவிக்கப்பட்டதால் ஒரு அவசர சட்டத்தை அமல்படுத்துவதை விட சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது தான் பொருத்தமாக இருக்கும். அதனால் சட்டமன்றத்தில் முன் வைத்து சட்ட முன்வடிவு கொடுத்துள்ளோம். எனவே இதில் அரசாணை வெளியிடாததால் எந்த தவறும் வந்துவிடவில்லை. அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்

கவர்னர் மீது வீண் பழி நாங்கள் சுமத்தவில்லை. அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்டதை போல் இந்த சட்ட முன்வடிவுக்கு கையெழுத்து போடாததை தான் கேட்டிருக்கிறோம். நான் கவர்னரை நேரில் சந்தித்தேன். சில சந்தேகங்களை கவர்னர் என்னிடம் கேட்டார். அந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறோம். அதில் ஓரளவு அவர் திருப்தியாகியிருப்பார் என்று நம்புகிறோம். இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்டாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளோம். அவரும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து விட்டு ஒப்புதல் தருவதாக கூறினார். அந்த சந்திப்பு மனநிறைவோடு தான் இருந்தது. முதல்-அமைச்சரிடம் இதனை சொல்லுங்கள் என அவர் சொல்லியிருக்கிறார். அதனால் கவர்னர் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story