பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டில் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்சால் பரபரப்பு-போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்
பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்தது. இதற்கிடையில் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்தது. இதை தொடர்ந்து குழாய் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து ஜோதி நகர் வழியாக மாக்கினாம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ் (தடம் எண் 6 பி) கோட்டூர் ரோடு வழியாக நேற்று காலை சென்றது.
அப்போது ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே வளைவில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக பஸ்சின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியது. இதனால் சத்தம் கேட்டு உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகள் அவதி
பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்க ஊழியர்கள், பொதுமக்கள் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மாக்கினாம்பட்டிக்கு செல்ல மாற்று பஸ் இல்லாததாலும், பஸ்சை மீட்க தாமதமானதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, மீட்பு பணி நடைபெற்றது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பள்ளத்தில் இருந்து பஸ் மீட்கப்பட்டது.
அதிகாரிகளின் அலட்சியம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்கு பிறகு ஜல்லிக்கற்களை போட்டு சாலை அமைக்காமல் அள்ளி குழியை மூடியதாக தெரிகிறது. இதனால் பஸ் பள்ளத்தில் சிக்கி உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடந்து உள்ளது. எனவே சாலை பணிகளை மேற்கொள்ளும் போது அதிகாரிகள் ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.