அரசு பஸ் - லாரி மோதல்; 20 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் -லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்
உளுந்தூர்பேட்டை
அரசு பஸ்
கடலூரில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பஸ் நிறுத்தத்தை கடந்து சென்ற போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விதிகளுக்கு புறம்பாக விபத்து பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது அரசு பஸ் மோதியது.
இதில் லாரியின் பின்பகுதியில் நீண்டு கொண்டிருந்த இரும்பு கம்பிகள் பஸ்சின் முன்பக்க பகுதியை குத்தி கிழித்து கொண்டு உள்ளே புகுந்தது. இதனால் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்து உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
20 பேர் படுகாயம்
மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்து அப்பகுதிமக்கள் ஓடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 10 வயது சிறுவனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.