விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கடலூர்

கடலூர் கோண்டூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 54). இவர் கடந்த 6.7.2014 அன்று விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் பெத்தநாயக்கன்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த தேவராஜன், வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் நஷ்டஈடு கேட்டு கடலூர் 1-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் விபத்தில் காயமடைந்த தேவராஜனுக்கு, அரசு போக்குவரத்து கழகம் ரூ.32 லட்சத்து 36 ஆயிரத்து 702 நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் தேவராஜன், கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். அதன்படி தேவராஜனுக்கு அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.52 லட்சத்து 2 ஆயிரத்து 590 வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என்றும் 1-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்காததால், கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.


Next Story