விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:46 PM GMT)

திண்டிவனத்தில் விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு அரசு பஸ்சில் போளூரில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழ்வெள்ளியூர் அருகே பஸ் வந்தபோது எதிரே வந்த மற்றொரு அரசு பஸ் மணிகண்டன் வந்த அரசு பஸ்மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கு திண்டிவனம் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 16.10.2020 அன்று பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு விபத்து நஷ்ட ஈடாக ரூ.98 ஆயிரம் வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்காததால் மணிகண்டன் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்று மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதை விசாரணை செய்த நீதிபதி இதுநாள் வரை வட்டியுடன் சேர்த்து மணிகண்டனுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும், வழங்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். ஆனால் நஷ்ட ஈடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் நேற்று திண்டிவனம் மேம்பாலம் அருகே வந்த விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் கொண்டுபோய் நிறுத்தி வைத்தனர். பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story