மருத்துவ கல்லூரிகள் முன்பு அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்
மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து மருத்துவ கல்லூரிகள் முன்பு அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம் இன்று நடக்கிறது.
மதுரை வண்டியூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக, கடந்த 29-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பின்னர் அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மதுரை மாநகராட்சியின் சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திக்கு வந்து விதிகளை மீறி நடந்ததாக புகார் எழுந்தது. எனவே அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-வது நாளாக நேற்றும் அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். ஏற்கனவே டாக்டர்கள் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருவதன் காரணமாக, ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிபுரிவது என்றும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் முன்பும் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். அதிலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வருகிற 11-ந்தேதி ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தகவல் அனுப்ப இருப்பதாகவும், 13-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.