மக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசான பச்சரிசி, சர்க்கரையை கொள்முதல் செய்ய அரசு உத்தரவு
மக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசான பச்சரிசி, சர்க்கரையை கொள்முதல் செய்ய அரசு உத்தரவு.
சென்னை,
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி ரேசன் அட்டைதாரர்கள் மற்றும் 19 ஆயிரத்து 269 இலங்கை தமிழர் குடும்பத்தினர் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. இதற்கு ரூ.2,356 கோடி செலவிடப்படுகிறது.
பொங்கல் பரிசில் கூறப்பட்டுள்ள பச்சரிசியை தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலமாகவும், சர்க்கரையை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் மூலமாகவும் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.