அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்


அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
x

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். கலெக்டர் சாந்தி வரவேற்றார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்தான உணவு

காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் உணவு சாப்பிடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளில் அரசு விதிமுறைகள்படி தரமான சத்தான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிலுவையில் உள்ள சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்

தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.


Next Story